"விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும்" - ரிஷி சுனக் கருத்து
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ரஷியாவின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. அதோடு உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இதனிடையே இங்கிலாந்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக், ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார்.
இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக ரிஷி சுனக் இன்று உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷி சுனக், "விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும். உக்ரைன் மக்களின் துணிச்சல் இந்த உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.